மன்னார் வைத்தியசாலையில் மரியதாசன் சிந்துஜா எனும் 27 வயதான பெண் உரிய சிகிச்சையளிக்கப்படாமல் மரணித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில், சம்பந்தபட்டவர்கள்மீது தாமதமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் இன்று(08.08) தெரிவித்தார்.
“மன்னார் வைத்தியசாலையில் எந்தவித சிகிச்சையும் வழங்கப் படாமல் மரணித்த மரியராஜ் சிந்துஜா என்ற இளம் பட்டாத்தாரிப் பெண்னின் மரணத்திற்கு காரணமான, அன்றைய தினம் கடமையில் இருந்த ஐவரும் சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என இன்றைய தினம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தனது உரையில் கோரிக்கை முன் வைத்திருந்தார். அதற்கு பதிலளிக்கையிலேயே பதிலளிக்கையிலேயே, சுகாதார அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
“இலங்கையில் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து நாங்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். குறித்த பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கையை நான் இன்னும் பார்வையிடவில்லை. இந்த விடயத்தில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தி இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்போம்” என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“அன்று வைத்தியசாலைக்கு சென்று வைத்தியர் அர்ச்சுனா நடந்த முறை பிழை என்றாலும், அவர் செய்த செயல் மூலமாகவே இந்த விடயம் வெளிவந்ததாகவும், அவருக்கு மன்னார் மக்கள் சார்பில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக வைத்தியர் அர்ச்சுனா 7 தினங்கள் சிறை சென்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்” பாரளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் ஊழியர்களின் முறைப்பாட்டுக்கு அமைய கடந்த 03 ஆம் திகதி கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா, நேற்று 07 ஆம் திகதி நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ரோகினி, நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்