தென் கொரியாவின் யெச்சியொன் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தருஷி கருணாரட்ன தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
திங்கட்கிழமை (5) பிற்பகல் நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள், 05.63 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை தருஷி கருணாரட்ன சுவீகரித்தார்.
வலல்ல ஏ. ரடநாயக்க மத்திய கல்லூரியைச் சேர்ந்த 18 வயதான தருஷி கருணாரட்ன வென்றெடுத்த இரண்டாவது பதக்கம் இதுவாகும்.
ஏற்கனவே ஆரம்ப நாளான ஞாயிற்றுக்கிமை (04) நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 53.70 செக்கன்களில் நிறைவு செய்த தருஷி கருணாரட்ன வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
அதேபோட்டியை மற்றொரு இலங்கையரான கம்பஹா திருச்சிலுவை கல்லூரி வீராங்கனை ஜயேஷி உத்தரா 55.71 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
1964க்குப் பின்னர் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கை பெண்கள் இருவர் ஒரே போட்டி நிகழ்ச்சியில் பதக்கங்கள் வென்றெடுத்தது இதுவே முதல் தடவையாகும்.
பெண்களுக்கான 400 மீற்றர் ஒட்டப் போட்டியில் இந்தியாவின் ரிசோனா மலிக் ஹீனா (53.31 செக்) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதேவேளை, பெண்களுக்கான 100 மீற்றர் 2ஆவது தகுதிகாண் போட்டியை 12.04 செக்கன்களில் நிறைவுசெய்து முதலாம் இடத்தைப் பெற்ற கேட்வே கல்லூரி வீராங்கனை தினாரா ரஷ்மி பண்டார தேல இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளார்.