பிரான்ஸ் நாட்டில் மிகவும் அரிதான வானியல் நிகழ்வாக கருதப்படும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 10 நாட்களுக்கு முன்பு, அங்கு ஒரு பெண் மொட்டை மாடியில் அமர்ந்து தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூழாங்கல் போன்ற ஒரு பொருள் அவர் விலா எலும்பை தாக்கியிருக்கிறது.
விலா எலும்பை தாக்கிய விண்கல்
“பக்கத்து கூரையின் அருகில் ‘பூம்‘ என பெரிய சத்தம் கேட்டது. அடுத்த வினாடி என் விலா எலும்பில் ஒரு அதிர்ச்சியை உணர்ந்தேன். என்னை ஒரு வெளவால் தாக்கியது என நினைத்தேன். பிறகு அதை ஒரு சிமெண்ட்துண்டு என்று நினைத்தோம். அது நிறம் எதுவும் இல்லாமல் இருந்தது” என அந்த பெண் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து அந்த பொருள் என்ன என தெரிந்து கொள்ள அப்பெண் முயற்சித்திருக்கிறார். அதில் அது சிமெண்ட்டால் செய்யப்பட்டதல்ல என்றும் அது ஒரு விண்கல் போல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர் தியர்ரி ரெப்மான் (Thierry Rebmann) எனும் புவியியலாளரிடம் கேட்டிருக்கிறார். அதனைபரிசோதித்த ரெப்மான்,
அது பூமியை சேர்ந்த பொருளல்ல என உறுதிப்படுத்தினார். “அப்பொருளின் உள்ளே இரும்பு மற்றும் சிலிக்கான்கலவை இருந்தது. அது விண்கல்தான். விண்கற்கள் பூமியில் விழுவது அரிதானதல்ல.
ஆனால், விண்கல்லை கண்டெடுப்பதும், அதிலும், விண்கல் ஒருவர் மேலே வந்து விழுவது போன்ற சம்பவங்களும் மிக அரிதான நிகழ்வாகும்.
வழக்கமாக பாலைவன பகுதிகளில் விழும் விண்கற்கள், பிரான்ஸ் போன்ற மிதமான வானிலையை கொண்டிருக்கும் நாடுகளில் விழுவது வழக்கமான ஒன்றல்ல” என்று டாக்டர் ரெப்மான் கூறியிருக்கிறார்