ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான சலூன்கள் மற்றும் அழகு சிகிச்சை நிலையங்களை மூடுமாறு தலிபான் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஒரு மாதத்துக்குள் இந்நிலையங்கள் மூடப்பட வேண்டும் என ஆப்கானிஸ்தானின் நல்லொழுக்கப் பாதுகாப்பு மற்றும் தீயொழுக்கத் தடுப்பு விவகார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், பெண்களுக்கு எதிராக விதிக்கப்படும் மற்றொரு கட்டுப்பாடு இதுவாகும்.
2021 ஓகஸ்ட்டில் தலிபான்கள் மீ;ண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு சிறுமிகள், பெண்கள் செல்வதற்;குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்கா, உடற்பயிற்சி நிலையங்கள் முதலியவற்றுக்கும் பெண்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெரும்பாலான அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்;பட்டுள்ளது.
சுமார் 20 வருடங்களாக அமெரிக்கா தலைமையிலான படையினரின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் இருந்தபோது தலைநகர் காபூல் மற்றும் ஏனைய நகரங்களில் பெண்களுக்கான சலூன்கள் மற்றும் அழகுசிகிச்சை நிலையங்கள் பெரும் எண்ணிக்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.