82.38 F
France
February 22, 2025
இலங்கை

சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரிப் போராட்டம் (Video)

மன்னாரில், சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரிப் போராட்டம்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதி வழிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்புத் துணியால் தமது வாயைக் கட்டி கையில் கறுப்புக் கொடியை ஏந்தியருந்ததோடு,

பணத்துக்கு மனித உயிரை விலை பேசலாமா?அரசே இலங்கையின் மருத்துவத்துறையை மறுசீரமைப்புச் செய்,உயிர் காக்கும் வைத்தியர்களே மனித நேயத்தை மதியுங்கள்,மருத்துவத்துறையின் அறம் எங்கே,சிந்துஜாவின் மரணம் இறப்பா?,கொலையா?,நீதி நிழலாடுகிறதா?,வைத்தியத் துறை மாபியாக்களின் கூடாரம் ஆகலாமா?போன்ற வாசகங்கள் பொறிக்கப் பட்ட பதாதைகளையும் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, நோயாளர்   விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்களின் அசமந்த போக்குக் காரணமாக   உயிரிழந்த சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையெனப் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும்,வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டினாலேயே இவ்வாறு நிகழ்ந்தது, எனவே இறந்தவருக்கு நீதி வேண்டும். இப்படி இன்னொரு கொலை நடைபெறக்கூடாது என்ற கோரிக்கையையும் முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க அவர்களை இடமாற்றம் செய்யும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கண்டணம் தெரிவித்துள்ளதோடு,

உயிரிழந்த சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் குறித்த மரணத்துடன் தொடர்புடைய வைத்தியர் உள்ளடங்களாக அனைவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கையை முன் வைத்தனர்.

குறித்த போராட்டத்தில் சிந்துஜாவின் தாய் சிந்துஜாவின் பிள்ளையோடு வந்து கலந்து கொண்டதோடு,பெண்கள் அமைப்பு,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,அருட் தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

  1. ரோகினி நிஷாந்தன்
    மன்னார் செய்தியாளர்


https://youtu.be/mw16hJ3Zgao?si=U7Doy_WWd5AaHm4A

Related posts

தம்புள்ளை பேரூந்தில் பயணித்த துருக்கி நாட்டு இளம் யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகம்..!

News Bird

18,000 டொலருக்கு வாங்கப்பட்ட வியாஸ்காந்… (LPL 2023)

News Bird

“இலங்கை கிரிக்கெட் பணம் வீணடித்ததை நிரூபித்தால் நாளையே நான் பதவி விலகுவேன்” (வீடியோ)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0