மக்களுக்கு தேர்தல்களில் நம்பிக்கை இல்லாமல் இல்லை, மாறாக ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை இல்லை எனவும் ஊடகங்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு எவரும் இடமளிக்க மாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க, தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் நாட்டு மக்களின் தகவல்களை அறியும் உரிமையை அழிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தகவல்களை ஊடகங்கள் மூலம் பரப்புவது அந்த நிறுவனங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று கூறி ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை இரத்து செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
என்ன ஆட்டம் ஆடினாலும் ஒக்டோபர் முதலாம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும், அதற்கு ரணிலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. இந்த நாட்டில் தேர்தலை ஒத்திவைத்து ஊடகங்களை அடக்கி ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஜனாதிபதி செயற்படுகின்றார் எனவும் அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
இத்தொகுதி மாநாட்டில் அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, அதே கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.