காதலை இடைநடுவே கைவிட்ட இளைஞனை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் பாதுகாப்புப் படையை சோ்ந்த பெண் ஒருவர் உட்பட நால்வர் இன்று (05) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.
வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (04) பிற்பகல் அலோபோமுல்ல பின்வத்தையில் முச்சக்கர வண்டியொன்றை பயன்படுத்தி இளைஞனை கடத்தியுள்ளதாக இளைஞன் மற்றும் அவரது தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட இளைஞனும், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் யுவதியும் காதலித்து வந்ததாகவும், அந்த இளைஞன் யுவதியை திருமணம் செய்து கொள்ள விரும்பாத காரணத்தினால் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த இளைஞன் கடத்திச் செல்லப்பட்டு பாழடைந்த வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் அதன் சாரதியை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட யுவதி பாதுகாப்பு படையில் பணிபுரிவதாகவும், கடத்தப்பட்ட இளைஞர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (05) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகே மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன ஆகியோரின் பணிப்புரைக்கமைய பொலிஸ் பரிசோதகர் பத்ம நந்தன தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.