பேராதனை பொது வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி மூலம் தனது மகள் உயிரிழந்துள்ளதாக தாய் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அஜீரணக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த 21 வயதான சமோதி சந்தீபனி அண்மையில் கொட்டலிகொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிகிச்சையின் போது அவருக்கு போடப்பட்ட ஊசி மூலம் உடல்நிலை மோசமடைந்து உடல் நீல நிறமாக மாறியதாக சமோதியின் தாய் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.
“எனது குழந்தைக்கு வயிற்றில் வலி ஏற்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சாந்தோம். முதலில் கொட்டலிகொடைக்கு அழைத்து சென்றோம். பின்னர் 10ஆம் திகதி பேராதனைக்கு அழைத்து வந்தோம். அதன் பின்னர் எனது மகள் ஐ.சி.யூவில் இருந்து மேலே 17ஆம் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சுமார் 3.30 மணியளவில் எனது மகளுக்கு கெனியூலா வழங்கப்பட்டு செலேன் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டு மருந்துகள் கொடுக்கப்பட்டன. இரண்டு மருந்துகளை ஊசி போட்டவுடனே என் குழந்தையின் கண்ணில் ஏதோ நேர்ந்தது, ஏதோ நடக்கப் போகிறது என்று என் மகள் கூறினாள். அதன் பிறகு, என் மகள் குளியலறைக்கு சென்றாள்.
பிள்ளை சிங்கில் தலையை வைத்திருந்தாள். உடல் முழுக்க நீலமாக மாறியது, கைகால்கள் நீலமாக மாறியது, என் குழந்தை சரிந்தது. தாதியர்கள் வந்து என் குழந்தையை வார்டுக்குக் கொண்டு வந்தனர். இன்று என் மகள் இல்லை. எனக்கு ஒரே ஒரு பிள்ளை. என் குழந்தைக்கு வேறு எந்த நோயும் இல்லை…”