யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் , பெண்ணொருவருக்கு புன்னாலைக்கட்டுவன் பகுதியில் காணி ஒன்றினை விற்பனை செய்வதற்கான முற்பணமாக 13 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.
காணியை பெண்ணுக்கு விற்காத நிலையில் , கொடுத்த பணத்தினை , பெண் திருப்பி கேட்டுள்ளார் முதியவர் பணத்தினை கொடுக்காது காலத்தை இழுத்தடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) , பணம் கொடுத்த பெண் வாகனம் ஒன்றில் நான்கு ஆண்களுடன் முதியவரின் வீட்டுக்கு அருகில் சென்று முதியவரை வாகனத்தில் கடத்தி சென்று , தாக்கி , அவரிடமிருந்து 13 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்ட பின்னர் முதியவரை விடுவித்துள்ளனர். அதனை தொடர்ந்து முதியவர் தன்னை கடத்தி பணம் பறித்தவர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவரை மானிப்பாய் பகுதியில் வைத்து நேற்றைய தினம் புதன்கிழமை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.